தலவாக்கலை காட்டுப் பகுதியில் பாரிய தீ!
தலவாக்கலை தொழிற்சாலைக்கு மேல் உள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் பாரிய தீ ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாத எவராவது தீ வைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். குறித்த தீ பரவல் இன்று (06) மாலை 4.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
மலையக பகுதியில் வரட்சியான காலநிலையுடன் கடும் காற்றும் நிலவி வருகிறது. பற்றைக்காடுகள் கருகி போயுள்ளதனால் தீ மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது கடினமாகவுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசங்களுக்கு தீ வைத்ததன் காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஊற்றுக்கள் அற்றுப்போவதுடன் சிறிய வகை உயிரினங்கள், பிரதேசத்திற்கே உரித்தான அரிய வகை தாவரங்கள், பெறுமதிமிக்க மரக்கன்றுகள் ஆகியன அழிவடையும் நிலையினை எதிர்நோக்கியுள்ளன.
தற்போது நுவரெலியா மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினை தொடர்ந்து பல வளமான காட்டு பகுதிகளுக்கும் புற்தரைகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன.
இதனால் பெரும் பாலான வனப்பகுதி அழிவுக்குள்ளாகியுள்ளன. இந்த காடழிப்பு காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, மாத்தளை நகருக்கு அருகில் உள்ள வில்ஷியார் வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் அந்த வனத்தின் பெரும் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
மாத்தளை ஏற்பட்டுவரும் வரட்சியான வானிலையால் சிலர் திட்டமிட்டு இந்த வனப் பகுதியில் தீ வைத்திருக்கலாமென காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தீயணைக்கும் பணிகளில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோர் முன்னெடுத்து வருகின்றனர்.
