வெளிநாடொன்றின் வணிக வளாகத்தில் பாரிய தீ விபத்து:11 பேர் உயிரிழப்பு
தாய்லாந்தின் தெற்கில் உள்ள புக்கெட் என்ற சுற்றுலாத் தீவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு 16 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (16) அதிகாலை 3.17 மணியளவில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வாடகைக்கு வாகனங்களை வழங்கும் கடையொன்று இயங்கி வந்த ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அருகிலுள்ள பல கட்டிடங்களுக்கும் தீ பரவியுள்ளது.
இரண்டு மணி நேர போராட்டம்
மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர சுமார் இரண்டு மணி நேரம் ஆனது என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பதினைந்து பேர் தாய்லாந்து நாட்டினர் மற்றும் ஒருவர் மியன்மார் நாட்டவர் ஆவார். உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களில் சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. புக்கெட்டின் மேற்குக் கடற்கரையில் உள்ள பிரபலமான படோங் கடற்கரைக்கு அருகில், ஒரு நகரப் பகுதியில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |