வீடொன்றில் துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது!
ஹுங்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிவுல, ஹுங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது நேற்று (02) இரவு வீடொன்றில் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வீட்டின் உரிமையாளருடனும் மற்றுமொரு நபருடனும் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கை
மேலும், இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் அறை ஒன்றிலுள்ள கதவொன்றில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை எனவும், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை துப்பாக்கியுடன் ஹுங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |