இலங்கையில் தயாரிக்கப்படவுள்ள முதலாவது ஏஐ திரைப்படம் : உறுதியளித்த ரணில்
உலகத் திரைப்படத்துறையில் இன்று செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பம் உள்வாங்கப்பட்டிருக்கிறது. அதனை முன்னோக்கி கொண்டுச் செல்லும் வகையில் முதலாவது ஏஐ திரைப்படத்தை தயாரிப்பதற்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தொலைக்காட்சித் துறையில் புரட்சி
''கடந்த இருபது ஆண்டுகளில் தொலைக்காட்சித் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. இன்று, கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளால் தொலைக்காட்சி சவாலுக்கு உட்பட்டுள்ளது.
இன்று உலகம் நெட்பிளிக்ஸ், அமேசன் மூலம் முன்னேறி வருகிறது. இதனுடன் நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
மற்றைய நாடுகள் பல மொழிகளில் திரைப்படங்களைத் தயாரிக்கின்றன. கிரீஸ் போன்ற சிறிய நாடுகளிலும் அதனைக் காணலாம். நாமும் அது குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
ஜப்பானில் ஏராளமான மக்களுக்கு பயிற்சி
எனவே, திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீனமயமாக்கி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக அபிவிருத்தி நிறுவனமாக மாற்றுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். அதற்கான அறிவை பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளோம்.
தொலைக்காட்சி தொடங்கியபோது, ஜப்பானில் ஏராளமான மக்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அது அந்தக் காலத்தில் யசோராவய போன்ற புதிய தொலைக்காட்சி நாடகங்கள் உருவாக வழிவகுத்தது. மீண்டும் அதுபோன்ற முயற்சிகளை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கடந்த ஆண்டு முதல் திரைப்படத் துறையில் இணைந்துள்ளது. த ப்ரோஸ்ட் குறும்படம் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திரைப்படங்களின் திரைக்கதையும் ஏஐ தொழில்நுட்பத்துடன் தயாராகி உள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகம்
மேலும் இந்தியாவில் மகாராஜா இன் டெனிம்ஸ் திரைப்படமும் ஏஐ மூலம் உருவாக்கப்படுகிறது. அதனை இலங்கைக்கும் கொண்டு வர வேண்டும்.
மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இலங்கையின் முதலாவது ஏஐ திரைப்படத்தை தயாரிப்பதற்காக முயற்சிகளை ஆரம்பித்துள்ளோம்.
அதற்காக நியமித்துள்ள குழுவிற்கு நான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். அதற்கான நிதியையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். இதன் மூலம் திரையுலகம் நாம் எதிர்பாராத பல மாற்றங்களை கண்டு வருகிறது.
திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீனப்படுத்தி முதல் ஏஐ திரைப்படத்தை உருவாக்கி புதிய பயணத்தை தொடர அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.” என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |