மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் - குவிக்கப்பட்ட புலனாய்வாளர்கள் (காணொளி)
வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு நீதிகோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருதங்கேணி பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருக்கும் மீனவர்கள்,
'எமது கடற்பரப்பு இந்தியாவுக்கு விற்கப்பட்டதா' - 'உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து' - 'இந்திய படகுகளுக்கு நாங்கள் இரையா' - 'வலை வீச உயிர் பயம் என்ன செய்வோம்' - 'எமது கடல் எமக்கு வேண்டும்' - 'கடற்றொழில் அமைச்சே திரும்பிப்பார்' - 'மீனவர்களை கொல்லாதே' போன்ற கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.
அப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மெற்கொண்டு வருவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.