கைவிடப்பட்ட யாழ்.கடற்றொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவின் உறுதிமொழியால் கைவிடப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும் மற்றும் யாழ் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19ஆம் திகதி காலை முதல் இன்று (22) வரை யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இந்நிலையில், இன்று நான்காம் நாள் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடி உணவு தவிர்ப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்தியத் தரப்பினர் அழைப்பு
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவி்க்கையில், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசினேன்.
பாண்டிச்சேரி முதலமைச்சர் எல்லை தாண்டும் கடற்றொழிலாளர்களைத் தடுப்பது தொடர்பில் எழுத்து மூலமான உறுதிமொழி தந்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் கடிதம் அனுப்பத் தயாராக இருப்பதாகவும், தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையகத்துடன் ஆலோசித்து கடிதம் அனுப்புவதாகவும் கூறியிருக்கின்றார்.
கடற்றொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பில் பேச வருமாறு இந்தியத் தரப்பினர் அழைப்பு கொடுத்திருந்தார்கள். நான் அவர்களிடம் கூறியிருக்கின்றேன் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் வர மாட்டார்கள் என்ற எழுத்து மூலமாக உத்தரவாதம் தந்தால் மட்டுமே பேச்சுக்கு வருவேன் என்று கூறியுள்ளேன்.
உணவு தவிர்ப்புப் போராட்டம்
எனது நிலைப்பாடு அன்று என்ன கூறினேனே அதுதான் எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவார்கள்.
கைது செய்யப்படுபவர்களை விடுவிக்க எனக்கு அழுத்தங்கள் வந்தாலும் எனது நிலைப்பாடு ஒன்றுதான்.
இதனால்தான் இந்தியா என்னை எதிரியாகப் பார்க்கின்றது.ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் கடற்றொழிலாளர்கள் பிரச்சினையில் மெளனமாக இருப்பதால் எதிரியாகப் பார்ப்பதில்லை .
ஆகவே, இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞைகளைக் காண்பித்துள்ள நிலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடுங்கள் கடற்றொழிலாளர் பக்கமே நான் நிற்பேன்." - என்றார்.
உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபவர்களுக்கு ஆதரவாக தும்பளை, கொட்டடி, சேந்தான் குளம், குருநகர், மாதகல், பலாலி, தையிட்டி, சக்கோட்டை, மயிலிட்டி, வளலாய், மயிலிட்டி மற்றும் சீத்திப்பந்தல் ஆகிய கடற்றொழில் சங்கங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய சிறையில் இருந்து விடுதலையான இலங்கை கடற்றொழிலாளர்கள்! விடுதலை ஆகி பல மாதம் ஆகியும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அவலம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |