440 சிறைக் கைதிகளுக்கு இன்று விடுதலை
இலங்கையில் பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு 440 சிறைக் கைதிகளுக்கு அதிபர் பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
குறித்த 440 சிறைக் கைதிகளும் இன்றைய தினம் விடுதலை செய்யப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் 440 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
தண்டனை தள்ளுபடி
40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அதிபர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் இதில் 6 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த கைதிகளின் தண்டனையை தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடு, அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் தண்டனை நிலுவையை நிறைவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 18 வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் தண்டனை 15 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு, மேல் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட நாள் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட பின்னர் புனர்வாழ்வுக் காலத்தில் அரைவாசி அல்லது அதற்கு மேல் சேவையாற்றிய கைதிகளின் எஞ்சிய புனர்வாழ்வுக் காலத்தை நிறைவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா சிறைச்சாலை
இதன்படி, வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இதன்போது வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் சீ. இந்திரகுமார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
