களு கங்கையின் மேல் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
களு கங்கையின் குடா கங்கை துணைப் படுகையில் உள்ள மேல் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று ( 02) வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று காலை 11.00 மணியளவில் அப்பகுதியில் கணிசமான அளவு மழை பெய்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடா கங்கையில் உள்ள நீரியல் நிலையங்களின் தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் ஆற்று நீர் மட்டங்களை ஆய்வு செய்த நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேசத்தில் அமைந்துள்ள குடா கங்கை பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ள நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்ககை நடவடிக்கைகள்
இதனால் குடா கங்கையின் வெள்ள சமவெளிகள் ஊடாக செல்லும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்புகள் அதிகம் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், இப்பிரதேசங்களை கடந்து செல்லும் குடியிருப்புவாசிகள் மற்றும் வாகன சாரதிகள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
