அவசர உணவு உதவிகோரி சிறிலங்கா சரணடைவு
சிறிலங்காவின் உணவு நெருக்கடி அவசரகால நிலைக்கு சென்றுள்ளதால் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தால் இயக்கப்படும் உணவு வங்கியிடம் சிறிலங்கா அவசர உணவு உதவியை கோரியுள்ளது.
சுமார் 100,000 மெற்றிக் தொன் உணவுப்பொருட்களை நன்கொடையாக வழங்குமாறு சிறிலங்கா கோரியுள்ளமை அதன் வரலாற்று நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளது.
தெற்காசிய நாடுகளில் ஒருகாலத்தில் மிகவும் வளமான நாடாகவும் தனிநபர் வருமானத்தில் உயர்நிலையையும் கொண்ட இலங்கை தற்போது தெற்காசிய உணவு வங்கியிடம் அவசர உணவு உதவியை கோரும் நிலைமைக்கு வந்துள்ளது.
இது உண்மையில் தனிநபர் ஒருவர் யாசகம் கேட்பதை போல நாடு ஒன்று யாசகம் கோரும் நிலையாகும்.
தமிழர்களின் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட 41 ஆம் ஆண்டு நினைவின் பின்னணியில் சார்க் அமைப்பின் உணவு வங்கியிடம் இந்த உதவி கோரப்பட்டுள்ள நிலைமை தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளின் பிரதிபலன்களை அறுவடை செய்யும் நிலையையும் பகிரங்கப்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 50 பில்லியன் டொலருக்கும் அதிகமான சர்வதேசக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் வங்குரோத்து நிலைமைக்குள் விழுந்த நாடு இப்போது அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக 100,000 மெற்றிக் தொன் உணவுப்பொருட்களை நன்கொடையாக வழங்குமாறு உணவு வங்கியிடம் கோரியுள்ளது.
இந்த நிலையை ஒரு துன்பியல் என வர்ணித்திருக்கும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி, இலங்கை உணவுப் பொருட்களுக்கு நன்கொடையை கோரும் நிலையை தோற்றுவித்துள்ளது.
அவசர காலங்களில் நாடுகளுக்கு அரிசி மற்றும் கோதுமையை வழங்குவதற்காக 2007 ஆம் ஆண்டில் சார்க் உணவு வங்கி அமைக்கப்பட்ட நிலையில் தற்போது அதனிடம் சிறிலங்கா சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
