விவசாயிகளின் முழுப் பயிர்களையும் கொள்வனவு செய்ய உணவு ஊக்குவிப்புச் சபை தீர்மானம்
ஐந்து இலட்சம் கிலோகிராம் அவரைகளை விற்பனை செய்ய முடியாத நிலையில் இருக்கும் அனுராதபுரம் அவரை விவசாயிகளின் முழுப் பயிரையும் கொள்வனவு செய்ய உணவு ஊக்குவிப்புச் சபை தீர்மானித்துள்ளது.
இந்த விவசாயிகள் தமது பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாய அமைச்சிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, முழு சோயா அவரைகளையும் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உணவு ஊக்குவிப்பு சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
அதிக இலாபம்
இதன்படி ஒரு கிலோகிராம் சோயா அவரைகளை 250 ரூபா வீதம் கொள்வனவு செய்வதற்கு உணவு ஊக்குவிப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அனுராதபுரம் உபுல்தெனிய களஞ்சியசாலையில் இன்று (06) முதல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் உணவு ஊக்குவிப்பு சபையின் தலைவர் பாலிந்த சாகர தெரிவித்தார்.
ஒரு கிலோகிராம் சோயா அவரை உற்பத்தி செய்வதற்கு 80-110 ரூபா செலவாகும் எனவும், 250 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக வருமானத்தையும் இலாபத்தையும் பெற முடியும் எனவும் உணவு ஊக்குவிப்பு சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தில் விதைகளை பயிரிட்ட விவசாயிகளிடம் இருந்து தலா 400 ரூபாவிற்கு விதைகளை கொள்வனவு செய்யுமாறு விவசாய திணைக்களத்திற்கு மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
