கட்டுநாயக்காவில் வந்திறங்கிய வெளிநாட்டு யுவதி கைது
26 வயதான யுவதியே சுங்கப்பிரிவினரால் கைது
வெளிநாடு ஒன்றிலிருந்து வந்த யுவதி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுரினாம் நாட்டைச் சேர்ந்த 26 வயதான யுவதியே சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டவராவார். குறித்த யுவதி 13 கோடி ரூபாய் பெறுமதியான 2.5 கிலோகிராம் ஹொக்கெய்ன் போதைப்பொருளுடன் வந்திறங்கிய நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேஸிலில் இருந்து கட்டார் சென்றுள்ள குறித்த யுவதி, அங்கிருந்து இலங்கைக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யுவதியின் சந்தேகமான நடத்தை
விமான நிலையத்தில் அவரின் சந்தேகத்துக்குரிய நடத்தையை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது பயணப் பொதியில் கொண்டுவரப்பட்ட உணவுப் பொருள் என்று குறிப்பிடப்பட்டிருந்த டின்களில் ஹொக்கெய்ன் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து யுவதியையும் மீட்கப்பட்ட ஹொக்கெய்னையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைத்துள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்தனர்.
