இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு அரசாங்கங்கள்: ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டு
வெளிநாட்டு அரசாங்கங்களும் முதலீட்டாளர்களும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக சிறிலங்கா நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
சீனா ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே, ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
உலக பொருளாதார மையத்தின் ஏற்பாட்டில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜீவன் தொண்டமான் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.
பொருளாதார நெருக்கடி
இந்த பயணத்தின் போது, தான் சுமார் 16 நாடுகளை பிரிதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருடனும் முதலீட்டாளர்களுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடி மற்றும் அதிலிருந்து மீள எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள பின்பற்றிய பாதை தொடர்பில் அறிந்து கொள்ள பலர் ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வர்த்தக உறவுகள்
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 73.8 வீதமாக இருந்த இலங்கையின் பணவீக்கம் தற்போது 1.5 வீதத்துக்கு குறைவடைந்துள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறாக இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது முதலீடுகளை மேற்கொள்ளவும் இலங்கையுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வெளிநாடுகள் எதிர்ப்பார்த்திருப்பதாக ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |