அரசாங்கத்திடம் முன்னாள் பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள்!
பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியை சந்திப்பதை தடுப்பதற்காக அரசாங்கம் ஒமைக்ரோனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒமைக்ரோன் பரவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தொற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஒமைக்ரோன் வேகமாக பரவுகின்றது. மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களால் தொழில்புரியவோ அல்லது பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கவோ முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பாவில் 50 வீதமானவர்கள் ஒமைக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களால் தொழில்புரிய முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரோன் தொற்றால் இறப்பு வீதம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள போதும் ஒரு நபர் நோய்வாய்ப்பட்டால், அவரால் வேலைக்கு செல்ல முடியாது, இது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே அவர்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
