கிடைத்தது இரகசிய தகவல் - கைதாகிய இராணுவ புலனாய்வாளர்கள்
மாத்தளை, நிட்டம்புவ பிரதேசத்தில் கசிப்பு விற்பனை செய்யும் பெண்ணிடம் கப்பம் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் நான்கு இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்களை நிட்டம்புவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நிட்டம்புவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிரதான காவல்துறை பரிசோதகர் கே.ஓ.பி.அபேரத்னவுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து நான்கு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நிட்டம்புவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட கசிப்பு விற்பனையாளர்களின் வீடுகளுக்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து சென்று ஆயிரக்கணக்கான ரூபாவை கப்பம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கசிப்பு குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்காக கசிப்பு விற்பனையாளர்களிடம் இருந்து இந்த கப்பம் பெறப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
