ரஷ்யர்களுக்கு மோசமான செய்தி! ஐரோப்பாவில் அதிரிக்கப்படும் விசா கட்டுப்பாடுகள்
ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் ஐரோப்பாவுக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில், அத்தகைய பயணங்களுக்கு முட்டுக்கட்டை போட, ஐரோப்பிய ஒன்றியம் புதிய நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
விசா வரம்புகள்
இந்த ஆண்டின் இறுதிக்குள், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறையில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சில உறுப்புநாடுகள், கடந்த சில ஆண்டுகளாகவே ரஷ்யர்களுக்கு விசா வரம்புகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.
இதன் அடிப்படையில், டிசம்பர் மாதத்திலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப்படவிருக்கின்றன.
ரஷ்ய அமைப்புகள் எச்சரிக்கை
ஆனால், இதற்கு எதிராக ரஷ்யாவில் உள்ள சில குடிமக்கள் அமைப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன. ரஷ்யர்களுக்கான சுற்றுலா விசாக்களை அரசியல் அழுத்தத்திற்கு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதே சமயம், புடின் எதிர்ப்பாளர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யுலியா நவல்னயா, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைகள் தலைவரான காஜா கல்லாஸுக்கு எழுதிய கடிதத்தில், புடின் ஆதரவு பெறும் பணக்காரர்கள், அரசின் பிரச்சாரத்தினை முன்னெடுக்கும் குழுக்கள் போன்றவர்களுக்கு மட்டும் விசா கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், சாதாரண மக்களை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
