மகிந்தவின் மகன் யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa) மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் இன்று (09) விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபரால் இந்த வழக்கு தொடரப்பட்டது.
மருத்துவ அறிக்கை
பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான அரச வழக்கறிஞர் ஆக்ஸ்வால்ட் பெரேரா, பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் விசாரணையைத் தாங்கும் அளவுக்கு மனரீதியாகத் தகுதியானவரா என்பது குறித்து கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி மூலம் கோரப்பட்ட நிபுணர் மருத்துவ அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, தொடர்புடைய விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை வழக்கை விசாரிக்க வேறு திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார்.
இந்த நிலையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |