மேலும் நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்
மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் புகலிடம் கோரி இந்தியாவின் தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர் .
மன்னார் முத்தரிப்பு துறையை சேர்ந்த தம்பதியினர் இருவர் தமது 10 வயது மகள் மற்றும் இரண்டரை வயதான மகனுடன் இன்று அதிகாலை படகு ஒன்றில் புறப்பட்டு 2 மணியளவில் தனுஸ்கோடியின் அரிச்சல் முனை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களை தமது பொறுப்பில் எடுத்துள்ள காவல்துறையினர் அவர்களை மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைத்து ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக தப்பிச்செல்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது.
இதற்கு முன்னதாக மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளை வாழ்விடமாக கொண்ட 3 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் இந்தியாவுக்கு தப்பி சென்றமை குறிப்பிடத்தக்கது .
