லண்டனில் காணாமல்போன சிறிலங்கா காவல்துறை உத்தியோகத்தர்கள்
பிரித்தானியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற சிறிலங்கா காவல்துறை உத்தியோகத்தர்கள் நால்வர் நாடு திரும்பத் தவறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற சர்வதேச காவல்துறை சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே இவர்கள் சென்றுள்ளனர்.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆறு காவல்துறை உத்தியோகத்தர்கள் குழு கடந்த மாதம் இலங்கையில் இருந்து புறப்பட்டு மே 4 ஆம் திகதி மீண்டும் கடமைக்கு சமுகமளிக்கவிருந்தது.
அறுவரில் இருவர் திரும்பினர்
எனினும் அவர்களில் இருவர் மாத்திரமே இதுவரை இலங்கைக்கு திரும்பியுள்ளனர். காவல்துறை விளையாட்டுப் பிரிவில் கடமையாற்றும் இரண்டு காவல்துறை சார்ஜன்ட்களும் இரண்டு கான்ஸ்டபிள்களும் இதுவரை இலங்கைக்கு வரவில்லை.
நாட்டின் சர்வதேச காவல்துறை சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இவர்கள் சென்றுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட நிதியை பயன்படுத்தி இந்த மாநாட்டில் பங்கேற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஐந்து வருட விடுமுறை நிராகரிப்பு
இதுவரை இலங்கைக்கு வராத அதிகாரிகள் சிலர் காவல்துறை தலைமையகத்தில் ஐந்து வருட விடுமுறை கோரியுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் அந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் இலங்கை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
