விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர் - யுவதிகளுக்கு வெளியான அறிவிப்பு
விவசாயத்தில் ஆர்வமுடைய புதுக்குடியிருப்பு இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், தூய்மையான இலங்கை எனும் அரசின் கொள்கைக்கு அமைவாக புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவில் மாகாண விவசாயத்திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரச காணியில் ஏற்றுமதிக்காக கேவண்டிஷ் (Cavendish) வாழைச்செய்கைக்காக அரை ஏக்கர் வீதம் இலவச குத்தகை அடிப்படையில் ஐந்து வருடங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலாளர்
இது தொடர்பில் பிரதேச செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “இத்திட்டமானது இளைஞர் மற்றும் யுவதிகளை விவசாயத்தினை நோக்கி ஈர்ப்பதற்காகவும் இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்திற்காகவும் வறுமையினை ஒழிப்பதற்காகவும் மற்றும் பயன்படுத்தப்படாமல் உள்ள விவசாய காணிகளை பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கங்களின் அடிப்படையிலேயே செயற்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர் யுவதிகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட எந்தவொரு கிராம அலுவலர் காரியாலயத்திலும் விண்ணப்ப படிவத்தினை (14.05.2025) தொடக்கம் (28.05.2024) வரை உள்ள வேலை நாட்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
இத்திட்டத்திற்கு ஏற்படும் செலவில் 25% இனை பயனாளிகள் செலுத்தும் இயலுமையை கொண்டிருக்க வேண்டும்.
பின்வரும் மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வதிவிடத்திற்கான புள்ளிகள்
வதிவிடத்திற்கான புள்ளிகள் (தேராவில் கிராமம் உடையார்கட்டு கிராமங்கள், அருகே உள்ள கிராமங்களில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில், மாவட்டத்தில் மற்றும் மாகாணத்தில்), பயிர்செய்யும் தன்மை, சமூக நிலை (பெண் தலைமைத்துவம் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) மற்றும் வயதெல்லை என்பவற்றின் அடிப்படையில் தேர்வுகள் இடம்பெறும்.
விண்ணப்பதாரிகள் அனைவருக்கும் தீரமானம் மற்றும் பெற்றுக்கொண்ட புள்ளிகள் என்பன அனுப்பி வைக்கப்படும்.
பிரதேச செயலகம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் பயனாளிகள் எனும் அடிப்படையில் நான்கு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.
மேலும் வாழைத்தோட்ட பயிர்ச்செய்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள அல்லது உருவாக்கப்படும் விவசாயிகள் கம்பனியில் அங்கத்தவராக சேர்க்கப்படுவார்கள்.
பயனாளிகள்
அத்துடன் பயனாளிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் கேவண்டிஷ் வாழை உற்பத்தியினை ஒப்பந்தம் மூலம் ஏற்றுமதிக்காக கைச்சாத்திடும் நிறுவனத்திற்கே வழங்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் விண்ணப்பதாரி வதியும் கிராம IDUL கள உத்தியோகத்தர்களின் சிபார்சினை பெற்றுக்கொள்ளல் வேண்டும் அல்லது திருத்தங்களுடன் சிபார்சினை பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
அவ் விண்ணப்பங்களை (28.05.2025) பிற்பகல் மூன்று மணி அல்லது அதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் திட்டமிடல் கிளையில் நேரடியாக கையளிக்க வேண்டும் அல்லது பதிவுத்தபாலில் கிடைக்குமாறு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், எக்காலத்திலும் குறித்த காணிகள் பயனாளிகளுக்கு சொந்தமாகாது என்பதுடன் ஏதிர்காலத்தில் தேவையேற்படின் குத்தகை காலத்தினை நீடிப்பது தொடர்பான தீரமானங்கள் எடுக்கப்படும்.
ஒப்பந்த சரத்துகள் மீறப்படின் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு ஏனைய பொருத்தமான பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
