ஈழ நிலைப்பாட்டில் முத்துக்குமாரின் தியாகம்: இன்றுடன் 15 ஆண்டுகள்
எனது அருமை தமிழ் மக்களே அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் நம் சகோதரர்களும் பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தி இருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தி இருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள்.
ஆம் உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்த துண்டறிக்கையை நகலெடுத்து உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மாணவர்கள் வசம் கொடுத்து போராட்டத்திற்க்கான ஆதாரத்தை பெருக செய்யுங்கள்.
என்றும் அன்புடன் அநீதிகளுக்கு எதிரான உங்கள் சகோதரன் முத்துக்குமார் என்ற மரண சாசனத்துடன் தமிழின விடுதலை கோரிய விடுதலை வேள்வியில் தன்னை அக்கினி வேள்வியில் ஆகுதி ஆக்கிய தமிழ் நேசன் முத்துக்குமாரின் நினைவு தினம் இன்று
தமிழ் நாட்டில் பிறந்த முத்துக்குமார் தமிழன் வீரத்தை தீப்பிழம்பாய் காட்டிய உணர்ச்சி விதை என்று சொல்லலாம். ஆம் , அந்த அளவிற்கு ஈழ தமிழரின் வரலாற்று வலி இவருள் உறைந்து பெருக்கெடுத்தது. அதனால் அன்று தன் ஏக்கங்களுடன் தனது தேசத்தை சாடி தன் நேசத்திற்கு உரிய ஈழ தமிழர்களுக்காக நடு வீதியில் தன்னை எரியும் மலையாக எரித்து கொண்டார்.
உடல் அங்கங்கள் தீயினால் உமிழ்ந்த போதும் உயிரின் எச்சமாய் உணர்வின் மிச்சமாய் எரிந்து போகாத பிரகடனமாய் முத்துக்குமாரின் வலிய எழுத்துக்கள் வலிமை தர வல்லவையாகும்.
மௌனத்தின் கோபமாய் இயலாமையின் வெளிப்பாடாய் தீயை மூட்டி புரட்சி தீயில் தமிழர்களை உணர்வூட்டிட ஓர் உயிர் தன்னில் சிதை மூட்டியது. அது மாணவர் புரட்சியாய் அகிம்சையின் திரட்சியாய் அறவழி முதிர்ச்சியாய் எழுந்து கொண்டது. மறுக்க முடியாத உண்மை.
பிறந்து வாழ்ந்து மறைந்து போகும் மனிதர்கள் மத்தியில் மறைந்து 15 ஆண்டுகள் ஆன போதும் ஒவ்வொரு தமிழனின் மனக்களிலும் உத்வேக நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கும் தியாக சுடர் முத்துக்குமாரை ஐபிசி தமிழ் நினைவேந்துகிறது.