நாடாளுமன்றில் வஜிர - தயாசிறி இடையே கடும் சொற்போர் - அனைவரும் அடிவாங்க நேரிடும் எச்சரிக்கைத் தொனி!
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்காக நாடாளுமன்றம் சிந்தித்து செயற்படவில்லை என்றால், மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் சிறிய வாகனங்களில் பயணம் செய்ய நேரிடும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“பொருளாதாரத்தை பகிர்ந்து கொள்ளாமல், அரசியலை பகிர்ந்துகொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிப்போம். பிரச்சினையில் இருந்து நழுவி சென்றால், அனைவரும் அடிவாங்க நேரிடும்.
தேசிய பொருளாதார கொள்கைக்கு இணங்கி திட்டினாலும் பரவாயில்லை” எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கேலியாக பேசிய தயாசிறி
அதேவேளை வஜிர அபேவர்தனவின் கதையை, மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்பதற்கு மிகவும் அழகான கதை என, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வஜிர அபேவர்தன வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது இடையில் எழுந்து தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.
மேலும் “மொட்டுக்கட்சியினர் சுற்றிவளைத்து இருக்கும் அழகை பாருங்களேன்” என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த வஜிர அபேவர்தன, “நீங்களும் மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தானே, நீங்களும் வாருங்கள். அப்போது மேலும் அழகாக இருக்கும்” எனக்கூறினார்.
