நாட்டின் எரிபொருள் இருப்பு...! அநுர அரசின் மீது எழுந்துள்ள சந்தேகம்
புதிய இணைப்பு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் (Ceylon Petroleum Corporation) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் உப தலைவர் குசும் சதநாயகே (Kusum Satanaike) தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சதாநாயக்க, இன்று (03) காலை ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் 3 சதவீத கழிவுக் கொடுப்பனவு குறைப்பு தொடர்பான மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
விலைத் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் உரிமையாளர்களால் இந்த பிரச்சினை திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கப்போவதுமில்லை என்றும் தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன
அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் விநியோகத்தர்களுக்கும் சமூகத்தில் காணப்படும் நிலைமைக்குமிடையில் பரஸ்பர நிலைமையே காணப்படுகிறது.
உண்மையில் சமூகத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கப்போவதுமில்லை. எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கு பொறுப்பு கூற வேண்டியது யார் என்பது சரியாக இனங்காணப்படவில்லை. எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லையென சமூக வலைத்தளங்களில் பரவலாக தகவல்கள் பகிரப்படுகின்றன.
குறிப்பிட்டவொரு சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபரொருவர் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளிலிருந்து தாம் விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் எரிபொருள் விநியோகம் எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்கப்படுகிறது. அவ்வாறிருக்கையில் சமூக வலைத்தளங்களில் எதற்காக இவ்வாறான செய்திகள் பரப்பப்பட்டன என்பது தெரியவில்லை.
சீர்குலைப்பதற்காக சதிதிட்டங்கள்
எரிபொருள் விநியோக செயற்பாடுகளை சீர் குலைப்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறான சதிதிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கும் எரிபொருள் விநியோகத்தர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
இதன் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் எரிபொருள் விநியோக நடவடிக்கைளிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இவ்வாறு பொறுப்பற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. தாம் விநியோக செயற்பாடுகளிலிருந்து விலகுவதாகக் கூறிவிட்டு முற்பதிவுகளை வழமை போன்று செய்திருக்கின்றனர்.
சில விநியோகத்தர்கள் வழமையை விட அதிக அளவில் எரிபொருட்களை முற்பதிவு செய்திருக்கின்றனர். அதற்கமைய இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முற்பதிவுகள் 1,696 உம், லங்கா ஐ.ஓ.சி. 471உம், சினொபெக் 391, ஆர்.எம்.பார்க் 366 முற்பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய ஒட்டுமொத்தமாக 2,924 முற்பதிவுகள் பதிவாகியுள்ளன. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் வழமையாகப் பதிவாகும் 1300 முற்பதிவுகளை விட இம்முறை 1600 என்றளவில் பதிவாகியுள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
உண்மையான பின்னணி
எவ்வாறிருப்பினும் இதன் உண்மையான பின்னணியை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களின் இலாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் காரணமாகவே விலை நிர்ணயம் இடம்பெறும் கால கட்டங்களில் இவ்வாறான பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. கடந்த 25ஆம் திகதியே விலை மாற்றம் தொடர்பில் நாம் அறிவித்திருக்கின்றோம்.
ஆனால் இதன் போது எரிபொருள் விநியோகத்தர்கள் எமக்கு எந்தவொரு விடயம் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கவில்லை. அல்லது 28ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற்ற போதும் கூட இது தொடர்பில் அவர்கள் அறிவித்திருக்கலாம்.
ஆனால் அதனையும் செய்யவில்லை. மாறாக திடீரென எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர் என தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 நாட்கள் முன்
