எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Sri Lanka Petroleum Corporation) நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை தொடரும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.
குறித்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தள பதிவில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அனைத்துப் பொருட்களின் கையிருப்பையும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பராமரிப்பதால், தடைகளற்ற எரிபொருள் விநியோகம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
6 மாதங்களுக்கான எரிபொருள்
மேலும், வருடாந்த பராமரிப்பு மற்றும் சேவைக்கு உட்பட்ட சுத்திகரிப்பு நிலையம் ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் அதன் செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் சரக்கு திட்டம், இருப்பு சேமிப்பு திறன், விநியோகத் திட்டம் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிர்வாகத்துடன் நேற்றைய தினம் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் புதுப்பிப்பை வழங்கினார்.
எரிபொருள் விலை
இந்நிலையில், மாதாந்த எரிபொருள் விலைத்திருத்தத்தின் படி, எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் இடம்பெறாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (Sri Lanka Petroleum Corporation) நேற்று அறிவித்துள்ளது.
இதன்படி, ஜூலை மாதத்தில் நிலவிய அதே விலையில், ஓகஸ்ட் மாதமும் எரிபொருள் விற்பனை செய்யப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் நாடளாவிய ரீதியாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் பரவி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |