முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அதன் தலைவர் லலித் தர்மசேகர இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி கட்டணங்களைக் குறைப்பதை விட, முறையான ஒழுங்குமுறை மூலம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டண நிர்ணயம்
அவர் மேலும் தெரிவிக்கையில், பெட்ரோல் லீற்றருக்கு 10 ரூபாய் குறைந்திருக்கிறது. சாதாரணமாக ஒரு லீற்றருக்கு 20 கிலோமீட்டர் வரை ஓடுகிறது.
அப்படியென்றால், 5 சதத்தை கூட நாம் வைத்துக் கொள்ளாமல், 10 ரூபாவை கொடுத்தாலும், கிலோமீற்றருக்கு 50 சதம் குறைக்க முடியும். ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லை.
தற்போதும் கூட கட்டண நிர்ணயம் இல்லாமல், நினைத்த நினைத்தவாறு கட்டணம் வசூலிக்கும் முச்சக்கரவண்டிகள் இலங்கை முழுவதும் உள்ளன.
முச்சக்கரவண்டி கட்டணம்
அதனால், 50 சதமோ அல்லது 10 ரூபாயோ குறைத்தாலும் அது தீர்வு இல்லை. மிகவும் பயனுள்ள, நம்பகமான முச்சக்கரவண்டி சேவையை உருவாக்குவதுதான் எங்கள் முதல் நோக்கம்.
இந்த 10 ரூபாய் குறைப்பின் மூலம் முச்சக்கரவண்டி கட்டணம் குறைவது நடக்கப்போவதில்லை என லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) பெட்ரோலின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
