கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம்! கிடைத்தது அனுமதி
பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை குறைத்து அந்த துறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாய, காணி, கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சமர்ப்பித்த யோசனைக்கே நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக மீன்பிடித்துறையில் ஏற்படும் பாதகமான தாக்கத்திற்கு தீர்வு வழங்கும் பொருட்டு 2024.08.21 நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எரிபொருள் நிவாரணம்
எனினும் குறித்த தீர்மானம் இதுவரை நடைமுறைப்படுத்தாத நிலையில் கடற்றொழிலாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் 2024.10 .01 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 6 மாத காலத்திற்கு நிவாரணம் வழங்கும் வகையில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.
இந்த நிலையில் எரிபொருளாக டீசல் பெற்றுக்கொள்ளும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் ஒரு லீற்றர் டீசலுக்கு 25 ரூபா கிடைக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு 3 இலட்சம் வரையான உச்ச எல்லைக்குள் கொடுப்பனவு வழங்குதல்.
அத்துடன் எரிபொருளாக மண்ணெண்ணை பெற்றுக்கொள்ளும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் 15 லீற்றர் மண்ணெண்ணைக்கு 25 ரூபா கிடைக்கும் வகையில் ஒரு மாதத்தில் 25 நாட்கள் என்ற அடிப்படையில் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் கொடுப்பனவு வழங்குதல்.
இதேவெளை டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு விலை திருத்தங்கள் செய்யப்படும் போது, டீசலுக்கு அதிகபட்ச சலுகை விலை 250 ரூபாவாகவும் மண்ணெண்ணெய்க்கான சலுகை விலை 150 ரூபாவாகவும் ஆறு மாத காலத்திற்கு பேணப்படும்.
டீசலுக்கு சந்தை மதிப்பில் இருந்து 7.5% சலுகையும் மண்ணெண்ணைக்கான சந்தை மதிப்பில் இருந்து 12.5% சலுகையும் கடற்றொழிலாளர் சமூகங்கள் பெறும் வகையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |