கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியம் : சபையில் செல்வம் எம்.பி வலியுறுத்தல்
கடற்றொழிலாளர்களுக்கு, உரிய முறையில் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய (07.10.2025) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இதற்குப் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar), இயந்திர மீன்பிடிப் படகுகளுக்கு 2 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான எரிபொருள் மானியங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், “நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தோம்.
உள்ளூர் மீன்பிடி தொழிலில் டீசல் எரிபொருள் பயன்படுத்தும் 5,750 படகுகளுக்கும் மண்ணெண்ணெய் எரிபொருளாகப் பயன்படுத்தும் 27,530 படகுகளும் உள்ளன.
இரண்டு இலட்சத்திற்கு அதிகமானவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதிக எரிபொருள் விலை காரணமாக ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது எரிபொருள் மானியம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முன்பு வழங்கிய திட்டம் தொடர்கின்றது. அதில் தவற விடப்பட்டவர்களுக்கான மானியம் வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
