கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுக்கு நிதி விடுவிப்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுக்கான நிதி விடுவிப்பு நீண்ட இழுபறியில் இருந்து வந்த நிலையில், நீதி அமைச்சு அதற்குரிய முதற்கட்ட நிதியை விடுவிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு நேற்று(21) அறிவித்துள்ளது.
கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியை அகழ்வதற்குரிய நிதியை கண்டறிவதில் சிக்கல் நிலமை நீடித்திருந்தது.
இதன் காரணமாக இரண்டு தடவைகள் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தொடர் முயற்சி
இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தொடர் முயற்சி காரணமாக நீதி அமைச்சு நிதியை விடுவிக்க இணங்கியுள்ளது.
இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமா மகேஸ்வரன் தெரிவிக்கையில்,
“கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு உரிய நிதியை வழங்க அனுமதி கிடைத்துள்ளது.
நேற்று(21) நீதி அமைச்சின் செயலாளருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிதியை மாவட்ட செயலகத்துக்கு விடுவிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளேன்.
நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விடுவிக்கப்பட்டவுடன் அகழ்வு பணிகள் ஆரம்பமாகும்.
சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சட்டமருத்துவ நிபுணர் கனகசபாபதி வாசுதேவா தலைமையில் பிற திணைக்களங்களும் இணைந்து அகழ்வு பணியை முன்னெடுக்கவுள்ளன” என்றார்.
