யாழில் இன்று ஐரோப்பிய தூதுக்குழு...! செம்மணி விவகாரத்தில் சர்வதேசத்தின் அடுத்த கட்ட நகர்வு
நீண்டகாலமாக இழுபறியில் இருந்த செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் அகழ்வுத் தளத்தை நேரில் பார்வையிடவுள்ளனர்.
இந்த நடவடிக்கை இன்று (21-04-2026) முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் ஏழாம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அகழ்வுப் பணிகளுக்கான நிதிச் செலவினங்களுக்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததால் பணிகள் தாமதமடைந்தன.
நீதி அமைச்சு
எனினும், கடந்த வாரம் இதற்கான நிதி நீதி அமைச்சால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி செம்மணிப் பகுதியில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பது குறித்து இன்றைய நீதிமன்ற அமர்வில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மனிதப் புதைகுழி
செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியை நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இன்று நேரில் பார்வையிடவுள்ளனர்.

இதற்கான அனுமதியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்தது.
சர்வதேச ரீதியில் அவதானிக்கப்படும் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த விஜயம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |