எம்.எஸ்.டி பாதுகாப்பு கஜேந்திரகுமாருக்கு தேவையா..!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அச்சுறுதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தையிட்டி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு விகாரையை அகற்றக் கோரும் அவர்களின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டிருந்தார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சி மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற ஒரு மக்கள் சந்திப்புக்காக சென்ற போது சிறிலங்கா புலனாய்வு பிரிவு மற்றும் காவல்துறையால் அச்சுறுத்தப்பட்ட விடயத்தின் எதிரொலிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
பாதுகாப்பு தொடர்பான ஒரு கேள்வி
இந்த விடயத்தை தாம் கவனத்தில் எடுப்பதாக இலங்கை மனித உரிமை குழுவின் யாழ் பிராந்திய பணியகம் தெரிவித்தாலும், இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ இல்லையென்றால் கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ நேரடியான முறைப்பாடுகளை சிறிலங்கா மனித உரிமை ஆணைக் குழுவுக்கு வழங்கவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தொலைபேசி ஊடாக இந்த முறைப்பாடுகள் வழங்கப்பட்டது எனவும் தையிட்டில் இடம்பெறும் போராட்டங்கள் முடிவுற்றதன் பின்னரே நேரடியான முறைப்பாடுகள் வழங்கப்படும் எனவும் நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு இடம்பெற்ற இந்த சம்பவம் அவர் மீதான பாதுகாப்பு தொடர்பான ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டாலும் இனிமேலும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோர மாட்டார்கள் எனவே தெரிகிறது.
கொள்கை ரீதியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இவ்வாறான பாதுகாப்புகளை கடந்த காலத்தில் நிராகரித்து இருப்பதால் எதிர்காலத்திலும் இவ்வாறான நிராகரிப்புகள் தொடரும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறது.
மக்கள் தான் தமக்குப் பாதுகாப்பு எனவும் தொடர்ந்து சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை தாம் நிராகரிப்போம் எனவும் அவர்கள் கூறுகின்றார்கள்.
எம்.எஸ்.டி பாதுகாப்பு பிரிவு
சிறிலங்காவை பொறுத்தவரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு எம்.எஸ்.டி எனப்படும் அமைச்சகப் பாதுகாப்பு பிரிவு தான் பாதுகாப்பு வழங்கிக் கொண்டு வருகிறது.
பொதுவாக இரண்டு பாதுகாப்பு உறுப்பினர்களை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தன்னுடைய பாதுகாப்புக்காக நியமித்துக் கொள்ளலாம், ஆயினும் கடந்த வருடத்தில் ராஜபக்ச அதிகார மையத்துக்கு எதிரான போராட்டம் இடம்பெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு உயர்த்தப்பட்டது.
அதன் அடிப்படையில் உப காவல்துறை பரிசோதகர் உட்பட ஆறு காவல்துறை அதிகாரிகளை நாடாளுமன்ற உறுப்பினர் தனது பாதுகாப்புக்கு நியமிக்கும் அளவுக்கு இந்த நிலைமை மாற்றப்பட்டது. ஆயினும் பின்னர் இது இரண்டு காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பாக மட்டுப்படுத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை உள்ளூர் காவல் நிலையங்களில் இருந்து தனக்கு விருப்பமான காவல்துறை உத்தியோகத்தர்ர்களை அமைச்சரவையின் பாதுகாப்பு பிரிவில் இணைத்து தமது சொந்த பாதுகாப்புக்காக அவர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால் எழுத்து மூல அறிவிப்புடன் எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனக்குரிய காவல்துறை பாதுகாப்பை மறுத்துக் கொள்ளலாம்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரை இந்த நடைமுறை ஊடாகத்தான் சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பை கடந்த காலத்தில் நிராகரித்து வந்தது.
தீவிர கொள்கை அரசியல் இருப்பவர்கள் இவ்வாறான பாதுகாப்பை மறுப்பது வழமையாகும் அதன் அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இந்த எம்.எஸ்.டி பிரிவின் பாதுகாப்பை பெறுவதில்லை ஆனால் நேற்றைய சம்பவத்துக்கு பின்னர் எம்.எஸ்.டி பிரிவின் பாதுகாப்பை கஜேந்திரகுமார் பெற்றுக்கொள்ள மாட்டார் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
மேலதிக நகர்வுகள்
இதற்கிடையே குறித்த சம்பவம் தொடர்பாக தொலைபேசி மூலம் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை இலங்கை மனித உரிமை குழுவின் யாழ் இணைப்பாளர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்த விடயம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் எழுத்து மூலமாக முறைப்பாடு ஒன்றை தமது தரப்பு பெற முயற்சிப்பதாகவும் அந்த முறைப்பாட்டை பெற்றால் அதன் பின்னர் மேலதிக நகர்வுகள் எடுக்கப்படும் என்றும் சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆனால் இதுவரை எந்த வித முறைப்பாடும் எழுத்து மூலமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். சிவஞானம் சிறிதரன், சித்தார்த்தன் ஆகியோரின் கண்டனங்கள் வெளிப்பட்டுள்ளன.
தமிழ் மக்களின் இயல்பு வாழ்வில் சிறிலங்கா இராணுவம் மற்றும் அரச புலனாய்வாணர்களால் உருவாக்கப்படும் அச்சுறுத்தல்களை மிகத் தெளிவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீதான அச்சுறுத்தல் வெளிப்படுத்தி உள்ளதாக அவர்களின் கண்டன அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்க, இந்த விடயம் குறித்து அறிக்கையிட்ட சிறிலங்கா காவல் துறையின் ஊடகப் பேச்சாளர் வேறுவிதமான விடயங்களை சொல்லி இருக்கிறார் காவல்துறையினரின் கருத்துப்படி, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் காவல்துறைக்கும் இடையே வெறும் வாய் தர்க்கம் மாத்திரமே ஏற்பட்டது என கூறப்படுகிறது.
நடந்தது என்ன...
ஆனால் தமிழ் தேசிய முன்னணிப் பரப்பு தமது கூற்றில் தொடர்ந்தும் அழுத்தமாகவே உள்ளது,
மருதங்கேணி விளையாட்டு கழகத்தைச் சேர்ந்தவர்களுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துரையாடல் நடத்தியபோது அந்த கலந்துரையாடல் நிகழ்வை சற்று தூரத்தில் நின்ற இருவர் தமது கைத்தொலைபேசிகளில் காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து அவர்களிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வினவிய போதே இரண்டு தரப்புக்கும் இடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் காணொளியை எடுத்த இருவரும் தங்களை அரச புலனாய்வாளர்கள் என கூறியுள்ளனர்.
எனினும் அந்தப் பொறுப்பை நிரூபிப்பதற்குரிய அடையாள அட்டையை காண்பிக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை வலியுறுத்திய நிலையில் புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திய இருவரில் ஒருவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தலைக்கவசத்தால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் அதனை அடுத்து இரண்டாவது நபரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்ததாகவும் கூறப்படுகிறது.
தப்பி ஓடியவர் அந்த இடத்திற்கு வரும் வரை பிடிக்கப் பட்டவரை விடுவிக்க முடியாது என முன்னணி தரப்பு தெரிவித்ததை அடுத்த தான் அந்த இடத்தில் சிறிலங்கா காவல் துறை தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருந்த பாடசாலையில் கா.பொ.த சாதாரண பரிட்சை நடந்து கொண்டிருந்தபோது அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மடக்கி வைத்திருந்த நபர் அரசு புலனாய்வு சேவையை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தினர்.
அத்துடன் அவரை விடுவிக்குமாறு கூறியும் இருந்தனர் ஆனால் தப்பி ஓடியவர் வராமல் அவரை விடுவிக்க முடியாது என மீண்டும் காவல்துறைக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் அந்த நேரத்தில் தான் காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் மூலம் தனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக விமர்சிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதற்குரிய மேல் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தனது ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறு இருப்பினும் சிறிலங்கா அரசாங்கத்தின் எம்.எஸ்.டி காவல்துறை பாதுகாப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோர மாட்டாது என்பது நிரூபிக்கப்படுவதால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருக்கு அவர்களின் ஆதரவாளர்கள் ஒரு பாதுகாப்பு வளையத்தை எதிர்வரும் நாட்களில் உருவாக்க கூடும் என பேசப்படுகிறது
