லசந்த விக்ரமதுங்க கொலை : சபையில் பிரதமரிடம் கேள்வியெழுப்பிய கஜேந்திரகுமார்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickrematunge) மகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
அத்துடன் உங்கள் அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் மீது தலையீடு செய்ய முடியாது எனக் குறிப்பிட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் லசந்தவின் மகள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் (07) இந்த விடயம் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்ட கஜேந்திரகுமார் இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் தெரிவிக்க இருக்கின்றதா என பிரதமரிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், “எனக்கு அந்த கடிதம் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்திற்குரிய பதிலை உரிய நபருக்கு அனுப்புவேன்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கான நீதியை நிலைநாட்டுவதே நமது நிலைப்பாடு. தொடர்ந்தும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.
அவரது மகளின் கவலையை நான் நன்குணர்கின்றேன். அவரது கொலைக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்போம் என உறுதியாக கூறுகின்றேன்.
இந்த சம்பவம் தொடர்பில் பல சாட்சிகள் காணப்படுகின்ற போதிலும் மேலும் பல சாட்சிகளை சேகரித்து நீதியை நிலைநாட்டுவோம்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)