காலி முகத்திடல் மைதானம் தொடர்பில் அநுர அரசு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!
கொழும்பு - காலி முகத்திடல்(Galle face) மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(05.11.2024) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் துறைமுக முகாமைத்துவ ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் கீழ் உள்ள காலிமுகத்திடல் மைதானத்தை மதம் சார்ந்த நோக்கங்கள் தவிர, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கக் கூடாது என கடந்த வருடம்(2023) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், காலி முகத்திடல் மைதானத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கு மாதாந்தம் சுமார் 2.5 - 3.0 மில்லியன் ரூபா செலவாகும்.
எனவே 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததைப் போன்று உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக உலாவுவதற்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும், அந்தத் தொகையை ஈடுகட்டுவதற்கும் சிறந்த வாய்ப்பாக இது அமையும்.
விழாக்கள், இசைக் கச்சேரிகள் மற்றும் மக்கள் சுதந்திரமாக பங்கேற்க அனுமதிக்கும் பிற கொண்டாட்டங்களுக்கு பொருத்தமான அளவுகோல்களுக்கு உட்பட்டு காலி முகத்திடல் மைதானத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கவுள்ளோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |