கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்: செவ்வந்தி தொடர்பில் காவல்துறை வெளியிட்ட தகவல்
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்பவரை சுட்டுக் கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி இதுவரை கைது செய்யப்படவில்லை என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு (Colombo) - புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குற்றவியல் சட்டப் புத்தகத்திற்குள் சூட்சுமமான முறையில் மறைத்து எடுத்து வந்த துப்பாக்கியால் சஞ்சீவவை சுட்டுப் படுகொலை செய்ததுடன், அங்கிருந்து சந்தேக நபர்கள்உடனடியாக தப்பிச்சென்றனர்.
கைதான பிரதான சந்தேகநபர்
இதற்கு செவ்வந்தி என்ற பெண்ணும் உடந்தையாக செயற்பட்டதுடன், துப்பாக்கி மறைத்து வைத்திருந்த புத்தகத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து வந்ததும் அந்த பெண்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டினை நடத்திய பிரதான சந்தேகநபர் 8 மணித்தியாலங்களுக்குள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தலைமறைவான செவ்வந்தி
இந்நிலையில், மாயமான செவ்வந்தி தொடர்பில் காவல்துறை தலைமையகம் தெரிவிக்கையில், “கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதியிலிருந்து மாயமாகியுள்ளார்.
பிரதான சந்தேக நபருக்கு உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.” என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும், தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
