இலங்கையை ஆக்கிரமிக்க தயாராகும் கும்பல்!! ரகசிய தகவல் அம்பலம்
கறுப்புப் பணக் கோஷ்டியொன்று 2022 ஆம் ஆண்டில் நாட்டை ஆக்கிரமிக்கப்போகின்றது என்ற ரகசிய தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன (Eran Wickramaratne) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின், நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“சிறிலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கத்தை கையில் எடுத்ததில் இருந்து நாட்டின் சகல துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது. பொருளாதாரம் சரிந்துவிட்டது, மக்களை வரிசையில் நிற்கவைத்து விட்டார்கள், நாடே நிதி நெருக்கடிக்குள் வீழ்ச்சிகண்டு விட்டது, வரவு செலவுத் திட்டத்தை கூட கடன்களில் கையாள வேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.
உலகில் உள்ள நாடுகளில் தமது வெளிநாட்டு கையிருப்பை ஒரு பில்லியனுக்கும் குறைவாக கொண்டுள்ள நாடொன்று இருக்கும் என்றால் அது இலங்கை என பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்தளவு மோசமான நிலைக்கு நாடு சென்றுள்ளது.
இந்த நிலையில் எந்த நாடும் எமக்கு கடன் கொடுக்காது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறுகிய கால திட்டங்களை சமர்பித்து நாட்டின் நிதி நெருக்கடியை கையாள முடியாது. நாடு இதனை தாண்டிய பாரிய பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது.
எமது பிணைகளை கூட பெற்றுக்கொள்ள எவரும் தாயரில்லை. அப்படியே பெற்றுக்கொள்ள வந்தாலும் அவர்கள் கறுப்புப் பண வியாபாரிகள் மட்டுமே வருவார்கள்.
அவ்வாறான கறுப்புப் பணக் கோஷ்டியொன்று 2022 ஆம் ஆண்டில் நாட்டை ஆக்கிரமிக்கப்போகின்றது என்ற தகவலும் எமக்கு கிடைத்துள்ளது.
இந்த நாட்டை 'வன் மேன் ஷோ' வினால் மீட்டெடுக்க முடியாது. அந்த மனநிலையில் இருந்து விடுபட முடியும்.
நாடு அவசர சிகிச்சை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே நாட்டை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்” என்றார்.