வானொலிப் பெட்டியில் வைத்து கடத்தப்பட்ட கஞ்சா : காவல்துறையினரால் மீட்பு
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால்18 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இருவரிடம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று (06) அதிகாலை செம்மணி பகுதியில் வானொலி பெட்டியில் வைத்து 3 கிலோகிராம் கஞ்சாவினை ஒருவர் கடத்த முற்பட்ட நிலையில் அவர் யாழ்மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
15 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மன்னார் பேசாலை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை பதுக்கி வைத்திருந்த இருவரையும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வானொலி பெட்டியையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பதில் தலைமை காவல்துறை அதிகாரி வெ.நந்தகுமார் தலமையில் இந்தக் கைது நடவடிகையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குற்றத்தடுப்பு காவல்துறையினர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி சாவகச்சேரியில் வைத்து 4 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர்களிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கஞ்சாவினை செம்மணி மற்றும் மன்னார் பகுதியில் காவல்துறையினர் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |