பாடசாலைக்கு அருகில் கொட்டப்படும் குப்பைகள் - சிக்கிய ஆதாரங்கள்!
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரிக்கு அருகில் பொதுமக்களால் குப்பைகள் போடப்பட்டு வருவதனால் பாடசாலை மாணவிகள் சுவாச பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் பொதுசுகாதார பரிசோதகர்கள் குப்பை கொட்டுபவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர்.
வவுனியாவில் பல வீதிகளிலும் பொறுப்பற்ற விதத்தில் பொதுமக்களால் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதனால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொட்டப்படும் குப்பைகள்
இந்நிலையிலேயே வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வெற்றுக்காணி மற்றும் அதனோடிணைந்த வீதியில் பொதுமக்கள் தமது வீட்டுக்கழிவுகள் மற்றும் வாகன திருத்தகத்தினர் என பலராலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது.
குறித்த காணியில் குப்பையை கொட்டாதீர்கள் என பதாதை போடப்பட்டுள்ள நிலையில் குப்பைகள் போடப்பட்டு வரும் நிலையில் பாடசாலையில் கற்கும் மாணவிகள் சுவாச பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாக பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்ததை அடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பொது சுகாதார பரிசோதகர்கள் மாநகரசபை சுகாதார தொழிலாளர்களின் உதவியுடன் குப்பைகளை குறித்த பகுதியில் கொட்டியவர்கள் தொடர்பில் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா என பார்வையிட்டனர்.
சிக்கிய ஆதாரங்கள்
இதன்போது வவுனியா காவல்துறையினரும் குறித்த இடத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது முகவரியிடப்பட்ட வங்கி கடிதங்கள், காசோலைகள், வாகன திருத்தகத்தின் பற்றுச்சீட்டுக்கள் உட்பட பல ஆதாரங்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டியுள்ளனர்.
