புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி யாழில் எரிவாயு சிலிண்டர் கொள்ளை: ஒருவர் கைது!
யாழ் மாநகரில் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்ற ஒருவரை வழிமறித்து தம்மை காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி எரிவாயு சிலிண்டர் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்ற நால்வரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து எரிவாயு சிலிண்டர் மற்றும் 25,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நேற்றிரவு (23) 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வீதியில் சென்றவரை மறித்த நால்வர், தம்மை காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் எனத் தெரிவித்து மிரட்டி அவர் எடுத்துச் சென்ற எரிவாயு நிரப்பிய சிலிண்டர் மற்றும் 25,000 ரூபா பணத்தையும் அபகரித்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவம் இடம்பெற்று சில மணிநேரங்களிலேயே கந்தர்மடத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து எரிவாயு நிரப்பட்ட சிலிண்டர் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டன.
ஏனைய மூவரையும் கைது செய்ய தேடி வருவதாகப் காவல்துறையினர் கூறினர்.
