குழந்தைகளின் கல்லறையாக மாறிவரும் காசா
காசா, குழந்தைகளின் கல்லறையாக மாறிவருவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸ், போர் நிறுத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கான உதவிகள் மறுக்கப்பட்டு, அவர்களின் வீடுகள் மீது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மோதல் தவிர்ப்பு
எனினும் காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான கோரிக்கையை மீண்டும் நிராகரித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு, உதவிகளை அனுமதிப்பதற்கான தற்காலிக தந்திரோபாய மோதல் தவிர்ப்பு மாத்திரமே சாத்தியம் எனக் கூறியுள்ளார்.
கடந்த 07 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் 4, 200 ற்கும் அதிகமான சிறுவர்கள், 2, 700 ற்கும் அதிகமான பெண்கள் உட்பட 10 ஆயிரத்து 300 ற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வு
காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல்கள் ஆரம்பித்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நினைவாக இன்று(7) நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பாடசாலைகள் மற்றும் பல்கலைகழகங்களில் நினைவேந்தல் நிகழவுகள் இடம்பெற்றுள்ளன.
