நாடாளுமன்ற தேர்தலை நடத்த தயார் : ரணிலின் சகா அறிவிப்பு
நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் ரணிலின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க நேற்று (22) தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் தேர்தல் தொடர்பில் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் மாரசிங்க,
பொதுத் தேர்தலை நடத்த முடியும்
“நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை எம்.பி.க்கள் நிறைவேற்றினால் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்றார்.
“பொதுத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கும் போது சட்டபூர்வமாக இந்த வருடத்திற்குள் அதிபர் தேர்தலை மாத்திரமே நடத்த முடியும். முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால், நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். எம்.பி.க்கள் தீர்மானம் எடுப்பார்களா என்று யோசிக்க வேண்டும்,'' என்றார்.
இலங்கை பொருளாதாரத்தின் தற்போதைய நிலை
மேலும், இலங்கை பொருளாதாரத்தின் தற்போதைய நிலையைப் பேணுவது முக்கியம் என பேராசிரியர் மாரசிங்க தெரிவித்தார். "இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளது, இந்த நிலை தொடர வேண்டும்," என்று அவர் கூறினார்.
2022 இல் இலங்கையின் முதன்மைக் கணக்கு இருப்பு மைனஸ் 885 பில்லியனாக இருந்தது. டிசம்பர் 31, 2023 நிலவரப்படி முதன்மை கணக்கு இருப்பு ரூ.51 பில்லியனாக மாறியதால் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |