இறைவனால் நிச்சயிக்கப்பட்டு சட்டங்களால் வழிநடத்தப்படும் திருமணம்!
அனைவருமே வாழ்க்கையில் அறிந்திருக்க வேண்டியதும், வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான விடயங்களில் ஒன்றும், வாழ்க்கையின் மிகப்பெரும் பங்கு வகிக்கும் மேலும் சிலருக்கு வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஒரு நிகழ்வான திருமணம் பற்றிய புரிதல் அத்தியாவசியமானதாகும்.
சமூகமொன்றில் சட்ட ரீதியான உரிமைகளை அனுபவிப்பதற்கு ஆட்களை உருவாக்குவதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறையாக திருமணம் இருக்கின்றது. திருமணத்தில் பாலியல் திருப்தி அடைதலைத் தாண்டி அதன் விளைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு சட்ட அந்தஸ்தை வழங்குதலில் இது முக்கியமானது.
திருமணம் தொடர்பான சட்டத்தின் அமைப்பு பொதுச் சட்டம், வழக்காற்றுச் சட்டம் மற்றும் தனிப்பட்ட சட்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இலங்கையில் பல்லின, பல மதங்களைக் கொண்டவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் கலாசாரத்துக்கு அமைவாக திருமணச் சட்டங்கள் இருக்கின்றன. அதாவது கண்டிய சிங்கள மக்களுக்கும் கரையோர சிங்கள மக்களுக்கும் வேறுபட்ட சட்டமும், முஸ்லிம்களுக்கு அவர்களின் மதம் சார்ந்த முஸ்லிம் சட்டமும், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேசவழமைச் சட்டமும் இருப்பதுடன் எல்லோருக்கும் பொதுவான சட்டமாக பொதுத் திருமணச் சட்டமும் (General Marriage Ordinance) உண்டு.
இந்தப் பதிவில் பொதுச் திருமணச் சட்டத்தில் தேவைப்படுத்தப்படும் தகைமைகள்/தகுதிகள் என்னவென்று பார்ப்போம்.
திருமணத்தின் அடிப்படைகள்.
1. திருமண வயது
1995ஆம் ஆண்டு கட்டளைத் திருத்தத்தின்படி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்தின் குறைந்தபட்ச வயது 18 ஆக உயர்த்தப்பட்டது. எவ்வாறாயினும், தனிச்சட்டமான முஸ்லிம் சட்டத்தில் மைனர் சம்பந்தப்பட்ட திருமணத்துக்கு சம்மதிக்கப் பெற்றோருக்கும், காதியாருக்கும் அங்கீகாரம் அளிக்கின்றது.
2. தடுக்கப்பட்ட திருமணங்கள்
நீங்கள் யாரைத் திருமணம் செய்ய முடியாது?
பொதுவாக இரத்த உறவு தொடர்புபட்ட நபர்களுக்கிடையிலான திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பொதுத் திருமணச் சட்டத்தின் கீழ் யாரெல்லாம் திருமணம் செய்ய முடியாது எனப் பட்டியலிடுகின்றோம்.
* ஒருவர் மற்றவரின் வாரிசாக இருத்தல் – உதாரணமாக ஒருவர் பெண்ணொருத்தியுடன் சேர்ந்து வாழ்ந்து, அந்தத் திருமணம் பதியாமல் இருந்து பின்னர் அந்தப் பெண்ணின் மூலம் தனக்குப் பிறந்த பிள்ளையைத் தானே திருமணப் பதிவு செய்தால் அது செல்லுபடியற்றது.
* ஒரு நபருக்கும் அவரின் மனைவி/கணவனின் முன்னைய தாரத்தின் மகள்/மகனுடனான திருமணம் உதாரணமாக ஒருவர் பெண்ணொருத்தியுடன் சேர்ந்து வாழ்ந்து, அந்தத் திருமணம் பதியாமல் இருந்து பின்னர் அந்தப் பெண்ணின் முதல் கணவருக்குப் பிறந்த பிள்ளையைத் திருமணப் பதிவு செய்தால் அது செல்லுபடியற்றது.
* இரத்த வழி உறவுள்ள சகோதர - சகோதரிகள் தமக்குள் திருணம் செய்ய முடியாது. அதாவது ஒரு நபருக்கும் அவரின் மகன்/மகள், பேரன்/பேத்தி, தாய்/தந்தை, தாத்தா/பாட்டி ஆகியோரின் விதவை/தாரமிழந்தவருக்கும் (தபுதாரன்) இடையிலான திருமணம் தடுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ஒருவர் பெண்ணொருத்தியுடன் சேர்ந்து வாழ்ந்து, அந்தத் திருமணம் பதியாமல் இருந்து பின்னர் தனது மகன் இறந்தபின், மகனின் மனைவியை (மருமகள்) திருமணப் பதிவு செய்தால் அது செல்லுபடியற்றது.
அத்தகைய கட்சிகளுக்கு இடையேயான திருமணம் அல்லது ஒத்துழைத்து வாழுதல் சிறைத்தண்டனைக்கான குற்றமாகும். (மச்சான் - மச்சாள் போன்றோருக்கிடையிலான திருமணங்கள் தடுக்கப்படவில்லை. எனினும், மருத்துவ காரணங்களின் கீழ் இவை பெரிதும் விரும்பப்படுவதில்லை.)
* ஒரே இனத்தைச் சேர்ந்த ஆண் - ஆண் அல்லது பெண் - பெண் திருமணம் செய்வதையும் குற்றமாகின்றது.
3. முதல் திருமணம் செய்திருத்தல்
முதல் திருமணமானது நிலைத்திருக்கும் வேளையில் மாற்றி திருமணம் செய்து கொள்வது தடுக்கப்படுகின்றது. ஆனால், இதில் முஸ்லிம் சட்டமானது வித்தியாசமான நடைமுறையைப் பின்பற்றி வருகின்றது.
4. திருமண சம்மதம்
ஐக்கிய நாடுகள் சபையின் திருமணப் பதிவு தொடர்பாக 1962இல் வெளியிட்ட அறிக்கையில் “இரண்டு தரப்பினரின் முழுமையான சுதந்திரமான சம்மதமின்றி எந்தத் திருமணமும் சட்ட ரீதியாக ஏற்படுத்த முடியாது” எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையின் பொதுத் திருமணச் சட்டத்தின்படி திருமணப் பதிவில் இரு தரப்பினர் கையொப்பமிடுவதன் மூலம் சம்மதத்தை வெளிப்படுத்தவேண்டும்.
5. திருமணப் பதிவு
கட்டளைகளின் கீழ் திருமணங்களைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. திருமணம் பதிவு செய்யப்பட்டமையே திருமணம் ஒன்றுக்கான சிறந்த சான்றாகும். ஆகவே, இந்து, பௌத்த மற்றும் கிறிஸ்தவ சடங்குகள் மற்றும் சடங்குகளின்படி புனிதமான திருமணங்கள் உட்பட வழக்கமான திருமணங்கள் பதிவு செய்யப்படாதவை என்றாலும் அவை செல்லுபடியாகும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஆகவே, ஆணும் பெண்ணும் கணவன் - மனைவியாக இணைந்திருக்கின்றார்கள் என்பதற்கான ஆதாரத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுவிட்டால், அவர்கள் சரியான திருமணத்தில் ஒன்றாக வாழ்கின்றார்கள் என்று சட்டம் கருதுகின்றது. ஒத்துழைப்பு என்பது திருமணச் சடங்குகள் நடைபெறாது ஆணும் பெண்ணும் ஒத்துழைத்து தமது குடும்ப வாழ்க்கையைக் கொண்டு செல்வதைக் குறிக்கின்றது. இது திருமணத் தன்மையை உறுதியாக நிரூபிக்கவில்லை.
எது எதுவாக இருந்த போதிலும் திருமணப் பதிவு என்பது பிற்பட்ட வாழ்க்கையில் எமக்கும், எமக்கு பின்வந்த வாரிசுகளுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தாது சுபீட்சமான வாழ்க்கை நடத்த உதவும் என்பதால் பதிவுத் திருமணம் என்பது என்றும் சிறந்ததுதான். திருமணம் என்பது வாழ்க்கையில் பெரும் பங்கை வகிக்கின்றது. அதனால்தான் இத்தனை சட்ட ஏற்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆகவே, ஒரு தனி மனித வாழ்வுக்காக இத்தனை சட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நடத்தப்படும் திருமணம் நிலைத்திருக்கவும் வேண்டும். திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் சிறப்பானதாக அமையவும் வேண்டும். அதற்குச் சட்டம் மட்டும் முயற்சி செய்தால் போதாது. ஒவ்வொரு தனிமனிதனும் தனது வாழ்க்கையைச் சிறப்பாக நடத்த முயற்சி செய்வதன் மூலம் வாழ்க்கையை நிம்மதியாகக் கொண்டு நடத்தலாம்.
- பஸ்றி ஸீ. ஹனியா
LL.B (Jaffna)