ஐ.நாவில் சீனாவுக்காக குரல் கொடுத்த இலங்கை
சீனாவுக்காக குரல் கொடுத்த இலங்கை
ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் தலையிடாமை கோட்பாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை மதிப்பளிப்பது அவசியம் என இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
சீனாவை மேற்கோள் காட்டி இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடரின் பொது அமர்வில் இதனை வலியுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 60/251 மற்றும் 48/141 தீர்மானங்களின் அடிப்படையில் மனித உரிமைகள் பேரவை மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பணிகள் பக்கசார்பற்ற தன்மை, ஆக்கப்பூர்வமான சர்வதேச உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகிய கோட்பாடுகளால் வழிநடத்தப்பட வேண்டும் என ஜெனீவாவில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவின் பிரச்சினைகளில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடக்கூடாது
சீனாவின் உள்நாட்டு பிரச்சினைகளில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடக்கூடாது என இலங்கை அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
ஐ.நா மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய நிறுவனங்களின் முக்கயத்துவத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உய்குர் தன்னாட்சி பிராந்தியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பஷ்லெட் மேற்கொண்ட விஜயத்தை வரவேற்பதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐ.நா சாசனத்தின் படி இறையாண்மை மற்றும் தலையிடாமைக்கு மதிப்பளிப்பது அவசியம் எனவும், சீனா என்ற கொள்கையையே அவர்கள் கடைபிடித்து வருவதாகவும் இலங்கை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி நாட்டின் சம்மதம் மற்றும் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், முன்னேற்றத்திற்கு அரசாங்கம் பங்களிக்கும் என இலங்கை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

