1948 இலிருந்து நடக்கும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை : கஜேந்திரகுமார் பகிரங்கம்
1948ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசத்திற்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை செயற்பாடுகள் ஒரு சந்தர்ப்பத்தில் விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (13) நடைபெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”2021 ஜனவரி மாதம் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் கையொப்பமிட்டு ஐ.நா மட்டத்தில் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தேசத்துக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கான குற்றங்கள், போர் குற்றங்கள் என்பன எவ்வாறு கையாளப்பட வேண்டும்.
ஐ.நா ஆணையாளரின் இலங்கை விஜயம்
அதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கையின் சம்மதம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றும் ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும் அல்லது இலங்கை தொடர்பில் குற்றவியல் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டு பாரப்படுத்தப்பட்டு முழுமையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதினோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த போது தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் செயற்பாட்டாளர்களின் ஒப்புதலோடு ஒரு கடிதத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடம் வழங்கினோம்.
அந்த கடிதத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் கையொப்பமிட்டனர். அந்த கடிதம் வழங்கி அடுத்த வாரமே இலங்கை தமிழரசுக் கட்சி தலைவரும் பொதுச்செயலாளரும் செம்மணி விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திடம் அந்த விசாரணை நடத்துவதற்குரிய அங்கீகாரத்தை கூறி அதற்கு மேலதிகமாக ஒரு சில சர்வதேச தரப்புகளின் கண்காணிப்போடு செய்வதற்குரிய ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்கள்.
தமிழ் தேசியக் கட்சித் தலைவர்கள்
இது நேருக்கு நேர் முரண்பட்ட நிலைப்பாடு. செம்மணியில் நடந்தது அநியாயம். இலங்கை அரசு இதனை மூடி மறைக்க முயற்சித்த நிலையில் எதேர்ச்சையாக தற்போது வெளி வந்திருக்கிற ஆதாரங்களை மூடி மறைக்கின்ற சந்தர்ப்பங்களை நீங்கள் வழங்குகிறீர்கள் என்பதாகவே இந்த கடிதத்தை பார்க்க வேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட தவறுகள் நடக்க கூடாது என்பதற்காக எதிர்வரும் வாரத்தின் இறுதியில் தமிழ் தேசியக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் மனித உரிமை அமைப்புகளையும் ஓரிடத்தில் சந்தித்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி எழுதிய கடிதத்தை எந்தவிதமான பின்வாங்கலும் இல்லாமல் மிக இறுக்கமாக அனைவராலும் கடைப்பிடிப்பதற்குரிய அணுகுமுறையை உறுதிப்படுத்துவதற்கு கூட்டம் ஒன்றை நடத்த நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
உத்தியோகபூர்வ அழைப்பு அனைத்து தரப்பினருக்கும் அனுப்பப்படும். மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டும் என்பதற்காக ஊடகங்களையும் நாங்கள் சந்திக்க வருகிறோம்.
செம்மணி மனிதப் புதைகுழி
இலங்கையில் தமிழினம் இந்தளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான முழு சரித்திரத்தையும் விசாரிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனப்படுகொலை நடக்கவில்லை. அது 1948 இல் இருந்து நடக்கிறது. அது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாகவும் பின்னர் நேரடியாகவும் நடைபெற்றது.
உண்மையான நீதி நியாயத்தை பெறக்கூடியதான ஒரு அணுகுமுறையை உறுதிப்படுத்துவதற்காக இந்த முயற்சியை செய்யவிருக்கிறோம் எந்த ஒரு கட்சியும் இந்த முடிவுக்கு இணங்கிவிட்டு வேறுபட்ட நிலைப்பாட்டை எடுக்க முடியாது.
தயவுசெய்து வந்து அவ்வாறு செய்யக் கூடாது. இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த முடிவை போல வேறு எவரும் செய்யக்கூடாது என்பதற்காகவே நாங்கள் இந்த முயற்சியை அவசரமாக செய்ய இருக்கிறோம்.
செம்மணி எந்தளவுக்கு இன்று முக்கியத்துவம் பெற்றிருக்கிறதோ, போர் நடைபெற்ற காலப்பகுதியில் நடைபெற்றவை மாத்திரமல்ல அநியாயங்கள்.
ஒட்டுமொத்தமாக 1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசத்திற்கு எதிராக நடைபெற்ற முழு அநியாயம் இனப்படுகொலை செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்திலே விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு அந்த அடிப்படையில் நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் சரியாக விசாரணை செய்யவேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியாக அமைய வேண்டும் என நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

