கனேடிய பிரதமர் மீதான கண்டனத்துக்கு சிறிலங்கா முனைப்பு
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை குறித்து கருத்து வெளியிட்டிருந்த கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூட்டோவிற்கு எதிராக சிறிலங்காவின் கடும்போக்குவாத அரசியல் தரப்பில் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஜஸ்டின் ரூட்டோவின் கருத்து கண்டிக்கப்பட வேண்டியது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரியா ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த கனேடிய பிரதமருக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் இன்று(23) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் பரிந்துரைத்துள்ளார்.
இதேவேளை, கனடாவிற்கு எதிராக இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, கனடாவில் பூர்வ குடி மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதாகவும் அதற்கு எதிராக இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர், “கனேடியப் பிரதமர் கடந்த 18 ஆம் திகதியை சிறிலங்காவின் இனப்படுகொலை தினமாக பிரகடனம் செய்து, இந்த நாட்டிற்கு பாரிய அபகீர்த்தியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
கனடாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை
சாதாரணமாக எமக்கு நன்றாகத் தெரியும், கனடா என்பது, அந்த நாட்டில் இருக்கும் பூர்வகுடிகளை இனப்படுகொலை செய்து, 1986 ஆம் ஆண்டு மீதமாக இருந்த பிள்ளைகளையும் கொலை செய்தனர்.
எச்சங்கள் காணப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தினம் ஜுன் 21 ஆம் திகதி வருகின்றது. கனடாவின் பூர்வ குடிகளின் தினம் ஜுன் 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
நான் இந்த நாடாளுமன்றத்தை கேட்டுக்கொள்வது என்னவென்றால், அனைவரும் ஒன்றிணைந்து, ஜுன் 21 ஆம் திகதியை கனடாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தினமாக பிரகடனம் செய்து, நாம் அனைவரும் அந்த தினத்தை நினைவுகூருவோம்.
இடம்பெறாத இனப்படுகொலையை நினைவுகூருவதற்கு அவர்களுக்கு முடியுமாக இருந்தால், உண்மையில் இடம்பெற்ற இனப்படுகொலையை நினைவுகூருவதற்கு எமக்கு முடியுமாக இருக்க வேண்டும்.
இந்த நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து அதனைச் செய்வோம் என நான் கோரிக்கை விடுகின்றேன். ஆளும் தரப்பில் இந்த யோசனையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” - என்றார்.
