எதிரணிகளின் பிளவைப் பயன்படுத்தி 2023இல் பொதுத்தேர்தல்! காய்நகர்த்தலை ஆரம்பிக்கும் பசில்
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு தயாராகுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தமது கட்சியினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளின் கூட்டம் அண்மையில் அலரி மாளிகையில் அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இதன் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்தும் அந்த செய்தியில்,
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி முடிவடையவிருந்தது.
இந்நிலையில் அரசாங்கம் உள்ளூராட்சி சபைகள் சட்டத்திற்கு அமைய அதிவிசேட வர்த்தமானி மூலமாக உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை நீடித்தது. இதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவுள்ளது.
எவ்வாறாயினும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ச தனது கட்சியின் பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் ஏன் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த திட்டமிடுகிறது?
2023 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்துவது என்ற அரசாங்கத்தின் திட்டமானது அரசியல் தந்திரோபாய நடவடிக்கை என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பது கிராமத்து தேர்தல். இந்த தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை கையாள்வதானது தேசிய தேர்தல் ஒன்றில் நடக்கும் வாக்களிப்பு போல் இருக்காது. அத்துடன் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையில் நடத்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்தது.
நாட்டில் காணப்படும் நிலைமையை கவனத்தில் கொள்ளும் போது 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை முதலில் நடத்தினால், பொதுஜன பெரமுன பின்னடைவை சந்திக்கும். இவ்வாறான பின்னணியில் இதனையடுத்து ஒரு வருடத்தில் நடத்தப்படும் அரச தலைவர் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பாதகமான நிலைமையை உருவாக்கும்.
இவ்வாறான பின்னணியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்தினால், அது தேசிய மட்டத்திலான தேர்தல் என்பதால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அது ஓரளவுக்கு சாதகமான தேர்தலாக இருக்கலாம். குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக பிளவுப்பட்டு காணப்படும் சூழ்நிலையில், அவர்களால் அரசாங்கத்திற்கு சவாலை ஏற்படுத்தும் இயலுகை குறைவு.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அதிருப்தியில் இருந்தாலும் அது அரசாங்கத்தை கவிழ்க்கும் அளவுக்கான சூழ்நிலையை நாட்டில் இன்னும் உருவாக்கவில்லை.
இதனால், 2024 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் நாட்டின் வாக்காளர்களின் மனநிலையை உராய்ந்து பார்ப்பதை விட பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது அரசாங்கத்தில் ஒரு தந்திரோபாய வழிமுறையிலான நடவடிக்கையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
