பூமிக்கு அடியில் மிகப்பெரிய கடல்... நீரின் தோற்றத்தில் புதிய வழித்தடத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்!
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் ஆழத்தில் ஒரு பரந்த கடல்போன்ற அமைப்பொன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இல்லினாய்ஸ், எவன்ஸ்டனில் உள்ள நோர்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் ரிங்வுடைட் (ringwoodite) எனப்படும் பாறையில் இருக்கும் ஒரு பரந்த நீர்த்தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலத்தடி நீர்த்தேக்கம் பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்து கடல்களின் அளவை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ளதாகவும், இதன்மூலமாக பூமியின் புவியியல் மற்றும் நீர் சுழற்சிக்கு புதிய வழிகளை இதன் மூலம் அறியக்கூடியவாறு உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நீரின் தோற்றம்
பூமியில் நீரின் தோற்றத்தை ஆராயும் போதே இது கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, ரிங்வுடைட் எனப்படும் (ringwoodite) கனிமத்தில் மறைந்திருக்கும் கடல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு அனுமானங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சில விஞ்ஞானிகள் வால்மீன் தாக்கங்களிலிருந்து நீர் தோன்றியதாக கூறினாலும், பூமியின் ஆழத்திலிருந்து தோன்றியிருக்கலாம் எனவும் கணிக்கின்றனர்.
இதுகுறித்து, நோர்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்டீவன் ஜேக்கப்சன் (geophysicist Steve Jacobsen) கூறுகையில், "பூமியின் நீரானது பூமிக்கு உள்ளே இருந்து வந்தது என்பது ஆதாரத்தை காண்பிக்கிறது.
நீரை உறிஞ்சும் கடற்பாசி
ரிங்வுடைட் ஒரு கடற்பாசி போன்றது, தண்ணீரை உறிஞ்சும். ரிங்வுடைட்டின் படிக அமைப்பில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று உள்ளது, இது ஐதரசனை ஈர்க்கவும் தண்ணீரைப் பிடிக்கவும் அனுமதிக்கிறது" என்றார்.
அமெரிக்கா முழுவதும் 2,000 நில அதிர்வு வரைபடங்களைப் பயன்படுத்தி கடல் ஒன்றை கண்டுபிடித்தும், 500 நிலநடுக்கங்களிலிருந்து நில அதிர்வு அலைகளை பார்த்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதோடு இந்த அலைகள் பூமியின் உட்புறத்தில் உள்ள போது வேகத்தைக் குறைத்ததாகவும், கீழே இருக்கும் பாறைகளில் தண்ணீர் இருப்பதை காட்டுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பின் ஆராய்ச்சி முடிவுகள் பூமியின் நீர் சுழற்சியில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |