கஞ்சா செடிகளை மேய்ந்துவிட்டு ஆட்டம் போட்ட ஆடுகள் : விவசாயி அதிர்ச்சி
வெளிநாடொன்றில் கஞ்சா செடிகளை மேய்ந்த ஆடுகள் போதை தலைக்கேறி ஆட்டம் போட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிரீஸ் நாட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கஞ்சா செடிகளை அறுவடை செய்து
கிரீஸ் நாட்டின் தெசலி பகுதியில் அல்மிரோஸ் நகருக்கு அருகே விவசாயி ஒருவர் மருத்துவ தேவைக்காக கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார். அவர் வளர்த்த கஞ்சா செடிகளை அறுவடை செய்து ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார்.
அந்த நேரத்தில் புயல் அடித்ததால் அவர் வளர்த்து வந்த ஆடுகளை வெளியே மேயவிடாமல் ஆட்டுக் கொட்டகையில் அடைத்து வைத்துள்ளார். ஒரு நாள் ஆடுகள் அனைத்தும் வழமைக்கு மாறாக நடந்து கொண்டுள்ளன.
உரத்து கத்தியும், மேலும் கீழும் குதித்தும் ஆட்டம் போட்டுள்ளன. இதனைப் பார்த்த விவசாயிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கஞ்சா செடி வைத்த அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்குக் கஞ்சா செடிகள் குறைந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
கஞ்சா செடிகளை மேய்ந்த ஆடுகள்
அப்போதுதான் ஆடுகள் கஞ்சா செடிகளை மேய்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், "இந்த சம்பவத்தை எண்ணி அழுவதா? இல்லை சிரிப்பதா? என்றே தெரியவில்லை. வெப்பம் அதிகமாக இருக்கும் காலங்களில் எங்களுக்கு விளைச்சல் இருக்காது. அதேபோல இயற்கைப்பேரிடர் காலங்களில் மகசூல் இருக்காது. தற்போது என்னுடைய ஆடுகளால் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்துவிட்டேன்.இனி என்ன செய்வது எனப் புரியவில்லை" என்றார்.