நகை அடகு வைக்கும் நிறுவனங்களில் குவியும் பெருந்தொகை மக்கள்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் தங்க நகைகளை அதிகளவு அடகு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின் உச்சமாக அதிகரித்த வாழ்க்கைச் செலவு மக்களை கடும் பொருளாதார மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது.
இவ்வாறான கடன் நெருக்கடி அதிக மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு முதன்மையான காரணம் என்றும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு புள்ளிவிவர வலைத்தளமான Numbeo வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் வசிக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று வசதியாக வாழ்வதற்கான வாடகையைத் தவிர்த்து மாதாந்திர செலவுகள் 570,997 ரூபாய் என்றும் தனிநபரின் வாழ்க்கைச் செலவு 506 டொலர் அல்லது வாடகையைத் தவிர்த்து 153,899 ரூபாய் செலவாகுவதாக குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிநபர் கடன்களை நம்பியிருக்க வேண்டியுள்ளதுடன் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வருமானம் வீழ்ச்சி காரணமாக அமைந்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு இதுவரை மதிப்பிடப்பட்ட தங்க அடகு கடன் ரூ. 365.5 பில்லியனாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, வட்டி விகிதங்கள் அதிகரிப்பால், அடகு வைக்கப்பட்ட தங்கத்தை மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடன் சுமை காரணமாக, மக்கள் பெரும்பாலும் பிரமிட் திட்டங்கள் போன்ற மோசடியான முறையில் பணம் சம்பாதிக்கும் முறைகளைப் பயன்படுத்த தூண்டப்படுவதாகவும், இந்த பிரச்சினை தற்போது இளைஞர்களையும் நேரடியாகப் பாதித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |