வரலாறு காணாத அளவிற்கு உலக சந்தையில் உச்சம் தொட்ட தங்க விலை
உலக சந்தையில் இன்று (21.01.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,800 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தங்கத்தின் மீதான தேவை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி காரணமாகத் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஐரோப்பிய நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப் போவதாக விடுத்துள்ள மிரட்டல், முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதனால் பங்குகளை விடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகரித்த தங்க விலை
மேலும், அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கிரீன்லாந்து விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு, வர்த்தகப் போர் மேகங்களைச் சூழ்ந்துள்ளதால் தங்க விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் 4,730 டொலர்களாகக் காணப்பட்ட தங்க விலை, இன்று ஆசிய வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் 4,800 டொலர்களைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |