தலைமன்னார் கடற்பரப்பில் பெருமளவு தங்கத்துடன் மூவர் கைது
தலைமன்னார் கடலில் மீட்கப்பட்ட தங்கம்
தலைமன்னாரில் நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்கம் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கிலோ எடை கொண்ட இந்த தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்களையும் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் காங்கேசன்துறை உப செயற்பாட்டு நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக சுங்கத்திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுதத் சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படையின் தலைமன்னார் முகாம் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த நிலையில் இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1.912 கிலோ கிராம் எடைகொண்ட இதன் பெறுமதி 43,208,000 ரூபாவாகும்.
மூவர் கைது
கரையில் இருந்து தலைமன்னாரின் இரண்டாவது மணல் திட்டு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று சந்தேக நபர்களும் தங்கமும் கைப்பற்றப்பட்டதாக சுதத் சில்வா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புதுக்குடியிருப்பு மற்றும் பேசாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு ஏழரை இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
