AI செயலிகளை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்: கூகுள் CEO சுந்தர் பிச்சை
ஏஐ செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை (Sundar Pichai) தெரிவித்துள்ளார்.
அண்மையில் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவா் கூறியதாவது: ஏஐ செயலிகள் தவறுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மக்கள் அந்தச் செயலிகளை மற்ற செயலிகளுடன் சோ்த்துப் பயன்படுத்த வேண்டும்.
கண்மூடித்தனமாக நம்பக் கூடாது
அதே போல், ஒரே ஏஐ தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. அதனால் தான் மக்கள் கூகுள் தேடுதல் தளத்தையும் பயன்படுத்துகிறாா்கள்.

ஆனால் இந்தக் கருவிகளை அவை சிறப்பாகச் செய்யும் சிலவற்றுக்கு மட்டும் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அவை சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது.
தற்போதைய ஏஐ தொழில்நுட்பங்கள் அதிநவீனமானதாக இருந்தாலும் சில தவறுகளை செய்கின்றன. தொழில்நுட்பம் எவ்வளவு விரைவாக வளா்கிறதோ, அதற்கேற்ப அதனால் ஏற்படும் தீங்குகளைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வேகமாக உருவாக்க வேண்டும்.
தொழில்நுட்ப வளா்ச்சி
அதனால்தான் எங்கள் நிறுவனம் ஏஐ பாதுகாப்புக்கான முதலீட்டையும் ஏஐ தொழில்நுட்ப வளா்ச்சிக்கான முதலீட்டுக்கு ஏற்ப அதிகரித்து வருகிறது.

உதாரணமாக, ஒரு படம் ஏஐ-யால் உருவாக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய உதவும் தொழில்நுட்பத்தை நாங்கள் இலவசமாக அளிக்கிறோம்.
ஏஐ போன்ற சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை ஒரே ஒரு நிறுவனம் மட்டும் வைத்திருக்கக் கூடாது. ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஏஐ-ஐ உருவாக்கி அனைவரும் அதையே பயன்படுத்த வேண்டிய நிலை வந்தால் அது மிகவும் கவலைக்குரியது என சுந்தா் பிச்சை (Sundar Pichai) தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |