யார் திருடன்... பசில் திருடன் - திருடிய பணத்தை கொடுத்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுங்கள் - கொழும்பில் அணி திரண்ட மக்கள்
கொழும்பில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்ட மக்கள் “யார் திருடன் பசில் திருடன்” என்ற கோசத்தை எழுப்பி பெருமளவில் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
கொழும்பு தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணியில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்ககாரவின் மனைவி யேஹாலி சங்ககாரவும் கலந்துக்கொண்டுள்ளார்.
நாட்டின் இளைய பரம்பரைக்காக தான் வீதியில் இறங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பின்னர் அங்கிருந்து பேரணியாக கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். “யார் திருடன் பசில் திருடன்” என் கோஷத்தை எழுப்பினர்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர், நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய பணத்தை அவர்கள் பயன்படுத்தி அனுபவித்து விட்டு, வெளியில் எடுத்துச் சென்று எமக்கு துன்பத்தை கொடுத்துள்ளனர். செல்லும் தேவை இருந்தால், செல்லுங்கள் நாங்கள் எவரையும் நாட்டில் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
எங்களுக்கு எந்த கவலையும் இல்லை, ஆனால் செல்வதற்கு முன்னர் திருடிய பணத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட குமார் சங்ககாரவின் மனைவி ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது, நாட்டு மக்களின், எமது இளைஞர், யுவதிகளுக்கு எதிர்காலம் இருக்க வேண்டும்.
நாட்டின் இளைய பரம்பரைக்காக நான் வீதியில் இறங்கி இருக்கின்றேன். எமது இளைஞர்களின் எதிர்காலத்தை 225 பேர் இல்லாமல் ஆக்கியுள்ளனர் என்றும் அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
